பகவத் கீதை

பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும்.

மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.

இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது.

ராஜாஜியின் கைவிளக்கு, பால கங்காதர திலகரின் கர்ம யோகம், மகாத்மா காந்தியின் அநாஸக்தி யோகம் போன்றவை பகவத் கீதை உரைகளாகும்.

உரை :
பகவத் கீதைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று இந்து சமயப் பெரியோர்களும், நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் போன்றவர்களும் எழுதிய பழைய உரைகளே பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த ஸ்வாமி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, வினோபா பாவே, அன்னி பெசண்ட் அம்மையார், சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும் சிலரும் சிறந்த உரைகளை எழுதியிருக்கின்றனர்.

மொழிபெயர்ப்பு:
உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் "இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.