ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது.
அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
ஐந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள்
வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
இந்நூலில் குறிஞ்சி,
முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும்
குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய்
'நடுவண் ஐந்திணை' என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு
உள்ளது என்பர்.